தேவ தயவு!

"கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார்" (யாத். 12:36).

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள். பார்வோன் அவர்களை கொடுமையாய் ஒடுக்கினான். அவர்கள்மேல் சுமக்க முடியாத வேலைப்பளுவை சுமத்தி, ஆளோட்டிகள் மூலமாக அவர்களை கொடுமைப் படுத்தினான். ஆண் பிள்ளைகளையெல்லாம், நதியிலே போட்டு விடும்படி கட்டளைக் கொடுத்தான்.

ஆனால் கர்த்தரோ, அவர்களுக்கு எகிப்தியரின் கண்களிலே தயவு கிடைக்கும் படிச் செய்தார். அதே கர்த்தர், உங்களை வீணாய்ப் பகைக்கிறவர்கள், எதிராளிகள், சத்துருக்கள் ஆகியோர் கண்களிலே தயவு கிடைக்கும்படிச் செய்வார். வேதம் சொல்லுகிறது, "ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனு டைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்" (நீதி. 16:7).

இன்றைக்கு சத்துருக்களாயிருக்கிறவர்கள் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய சிறந்த நண்பர்களாய் மாறுவார்கள். வேதம் சொல்லுகிறது, "பட்சிக்கிறவனிடத் திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது" (நியாயா. 14:14).

பாருங்கள்! எகிப்தியர் கண்களிலே தயவு கிடைத்ததினாலே, அவர்கள் இஸ்ர வேலருக்கு பொன் ஆபரணங்களையும், வெள்ளி ஆபரணங்களையும், தேசத்தின் உச்சிதங்களையும் அள்ளிக் கொடுத்தார்கள். கர்த்தர் தயவு கிடைக்கும்படிச் செய்ததினால், இஸ்ரவேலர் திரளான செல்வங்களோடு எகிப்தைவிட்டுப் புறப் பட்டார்கள்.

இயேசுகிறிஸ்து தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக். 2:52) என்று வேதம் சொல்லுகிறது. அவரைப் பெற்றெடுக்க மரியாளின் தயவு அவருக்குத் தேவையாயிருந்தது, வளர்த்து ஆளாக்க யோசேப்பின் தயவு தேவையாயிருந்தது, அவரை அடக்கம் பண்ண அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் தயவு அவருக்குத் தேவையாயிருந்தது.

ஆகவே, மனுஷ தயவை நீங்கள் அற்பமாய் எண்ணக்கூடாது. இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போது, உங்களுக்கு அநேகருடைய கண்களிலே தயவு கிடைக்கும் படி, கர்த்தர் கிருபை செய்கிறார். தயவு என்றால், "நன்மை செய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை" (நீதி. 19:22) என்பதாகும்.

அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை மறந்துபோய் விடக்கூடாது. நீங்கள் மற்றவர்களின் தயவை நம்பியே வாழ்ந்துகொண்டிராமல், உங்களால் முடிந்த வரைக்கும் நீங்கள் மற்றவர்களுக்கு தயை செய்பராக வாழ வேண்டும். அன்பாக, ஆறுதலாக பேசுவதே ஒரு தயவாகும். தேவை நிறைந்த மக்களுக்கு பண உதவி செய்வது ஒரு தயவாகும். துக்கம் நிறைந்த மக்களின் வாழ்க்கையில் அவர்களை விசாரிப்பது, வியாதியாயிருக்கும் வேளையிலே பார்க்கப்போவது ஒரு தயவாயிருக்கும்.

தயவுள்ளவனுக்கு கர்த்தர் தயவுள்ளவராக இருப்பார் (சங். 18:25). தயவும், இரக்கமும் இணைந்து செல்லுகின்றன. "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" (மத். 5:7). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு மனிதர் கண்களிலும், வேலை ஸ்தலத்திலுள்ள மேல் அதிகாரிகளிடத்திலும் தயவு கிடைக்கும்படி செய்வார்.

நினைவிற்கு:- "இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவுசெய்தீர்" (2 சாமு. 7:21).