தேவ மகிமையின் சுவிசேஷம்!

"தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி" (2 கொரி. 4:4).

சுவிசேஷத்தை ‘விடுதலையின் சுவிசேஷம்’, ‘மகிமையின் சுவிசேஷம்’ என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். விடுதலையின் சுவிசேஷம் உங்களை பாவம், சாபம் வியாதியிலிருந்து விடுதலையாக்குகிறது. மகிமையின் சுவிசேஷம், கிறிஸ்துவின் சாயலில் மறுரூபப்படுத்துகிறது.

இந்த இரண்டு சுவிசேஷங்களையும் லோத்துக்கு தேவன் கொடுத்தார். "நீ சோதோம் கொமோராவை விட்டு வெளியே வா" என்று சொன்னார். அது விடுதலையின் சுவிசேஷம். "இந்த சம பூமியெங்கும் நில்லாதே மலைக்கு ஓடிப்போ" என்று சொன்னார். அது மகிமையின் சுவிசேஷம். லோத்தின் மனைவியோ, விடுதலையின் சுவிசேஷத்துக்கு கீழ்ப்படிந்தாள். ஆனால் மகிமையின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியாமல் பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

இதைப்போலவே, இஸ்ரவேலருக்கு இரண்டு சுவிசேஷங்கள் கொடுக்கப் பட்டன. ஒன்று, எகிப்திலிருந்து வெளியே வரவேண்டிய விடுதலையின் சுவிசேஷம். அடுத்து, பாலும் தேனும் ஓடுகிற கானானைச் சுதந்தரித்துக் கொள்ளக்கூடிய மகிமையின் சுவிசேஷம். விடுதலையின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, எகிப்தை விட்டு வெளியே வந்தவர்கள் ஆறு லட்சம் புருஷர்கள். ஆனால் மகிமையின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து கானானுக்குள் பிரவேசித்தவர்கள் இரண்டு பேர்தான்.

தேவபிள்ளைகளே, விடுதலையின் சுவிசேஷத்தில் நீங்கள் திருப்தியடைந்து விடக்கூடாது. தேவன் உங்களுக்கு வைத்திருக்கிற மகிமையின் சுதந்திரங்களை யெல்லாம் பெற்று, கிறிஸ்துவில் பூரணப்பட வேண்டும். அப். பவுல், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்" (கொலோ. 1:28) என்று எழுதுகிறார்.

அப். பவுல், முதலாவது, ஒரு மனுஷனை கிறிஸ்துவுக்குள் கொண்டு வர வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் வந்தவர்களை தேறினவர்களாய் நிலை நிறுத்த வேண்டும் என்று வாஞ்சித்தார். இந்த இரண்டு சுவிசேஷமும் நிறைந்திருக்கும்போது, அது மகிமையான ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

விடுதலையின் சுவிசேஷத்தின் மூலமாய், ஒரு பாவி ஐந்து நிமிட நேரத்திற்குள்ளே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் பரிசுத்தப்பட்டு பூரணப்படுவது என்பது, வாழ்நாள் முழுவதுமுள்ள அனுபவமாகும். ஒரு பக்கம் இரட்சிக்கப்படுதல்; மறுபக்கம் பரிசுத்தப்படுதல். ஒருபக்கம் ஜீவனைப் பெற்றுக்கொள்ளுதல்; மறுபக்கம் பரிபூரண ஜீவனை அடைந்து கொள்ளுதல்.

இயேசு நேசிக்கிறார், இரட்சிக்கிறார், பாவங்களை மன்னிக்கிறார், வியாதி களை குணமாக்குகிறார் என்று விடுதலையின் சுவிசேஷத்தைக் கேட்பதற்கு இனிமையாயிருக்கும். இவையெல்லாம் இயேசுகிறிஸ்து செய்கிற விடுதலையின் கிரியைகள். அதே நேரத்தில், நீங்கள் உங்களை ஜீவபலியாக அர்ப்பணித்து, உபவாசித்து, ஜெபித்து, சபை கூடுதலிலே பங்குபெற வேண்டும். வேத வசனங்களை ஆராந்து பார்க்கவேண்டும். தேவபிள்ளைகளே, அப்பொழுது நீங்கள் மகிமையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10).