தனிமை!

"மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" (ஆதி. 2:18).

தனிமை வெறுமையானது, வேதனையானது. அது தன்னைத்தானே கொல்லும் சோக உணர்ச்சியுடையது. தனிமையாயிருப்பவர்கள் விரக்தியடைந்து, மனக் கவலையோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலரைத் தனிமை உணர்வு கடினமாக்கிவிடுகிறது. அவர்கள் மற்றவர்களோடு அன்பாய்ப் பழகுவதில்லை. மற்றவர்களிடத்தில் குற்றங்கண்டுபிடித்துக் கொண்டேயிருப்பார்கள். "தனிமை உணர்ச்சி சாத்தானின் தொழிற்கூடம்" என்பது பழமொழி.

கர்த்தர் பரலோகத்தில் தனிமையாயிருக்க விரும்பாமல், மனிதனோடு ஐக்கியம் கொள்ள விரும்பி பூமிக்கு இறங்கி வந்தார். மனிதனோடு உறவாடினார். ஆனால், மனிதனோ, பாவம் செய்து விருட்சங்களுக்குள்ளே போய் ஒளிந்துகொண்டான். அவரை விட்டு விட்டு சாத்தானைத் தெரிந்துகொண்டான். அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்காமல், வலுசர்ப்பத்தின் வார்த்தைக்குச் செவிகொடுத்தான்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்து அன்புள்ளவர் மட்டுமல்ல, உங்கள் அன்புக்காக ஏங்குகிறவரும்கூட என்பதை மறந்து போகாதிருங்கள். அந்த அன்பின் தேவனே உங்கள் கலக்கங்களை மாற்றி, அமர்ந்த தண்ணீர்களண்டையில் உங்களை நடத்து வார். இன்றைக்கும் அவர் உங்களுடைய தனிமையை நீக்கி உங்கள்மேல் பாசம் கொண்டு, "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவது மில்லை" (யோசுவா 1:5) என்று வாக்குப்பண்ணுகிறார்.

நீங்கள் இந்த வாக்குத்தத்தத்தை முழுமையாக விசுவாசிப்பீர்களானால், தனிமை உணர்ச்சியினால் ஒருபோதும் பாதிக்கப்படமாட்டீர்கள். உங்கள் தனிமை நீங்க, தேவ பிரசன்னத்தையும், தேவ சமுகத்தையும் உணர்ந்து, அவரது மார்பில் சார்ந்து கொள்ளுங்கள்.

இயேசு சிலுவையிலே தன்னையே தனிமைப்படுத்த வேண்டியதாயிற்று. அவருடைய பாடுகளும், துயரங்களும் ஏராளம். அதை யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. தனிமையாகவே எல்லாவற்றையும் அவர் சகித்தார். அவரோடிருந்த சீஷர்கள் அவரை விட்டு விலகினார்கள். யூதாஸ்காரியோத்து அவரை காட்டிக் கொடுத்தான். அவர் அதிகமாய் நேசித்த மூன்று சீஷர்களும் தூங்கி விழுகிறவர்களாகவும், ஆபத்தில் அவரை தனிமையில் விட்டுவிட்டு பயந்து ஓடுகிறவர்களுமாகவேயிருந்தார்கள்.

வேதம் சொல்லுகிறது: "அவர் தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்" (மத். 14:23). "சாயங்கால மானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ, கரையிலே தனிமையாயிருந் தார்" (மாற்கு 6:47).

தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்ளும்போது, உங்களுடைய தனிமையும் நீங்கிப் போகும், கர்த்தருடைய தனிமையும் நீங்கிப் போகும். நீங்களும் தேற்றப்படுவீர்கள். கர்த்தரின் இருதயமும் மகிழ்ச்சியடையும். கர்த்தருடைய கரத்தை நீங்கள் பிடிக்கும்போது, உங்களுக்கு ஒரு உற்சாகமும், தைரியமும் வரும். கர்த்தர் எப்பொழுதும் உங்களோடிருக்கிறார் என்பதை உணர்ந்து அவரைத் துதியுங்கள்.

நினைவிற்கு:- "நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (யோவான் 16:32,33).