தளரவிடாதே!

"அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்" (சேப். 3 :16).

உங்கள் கைகளைத் தளரவிடாதிருங்கள். உள்ளத்தை சோர்ந்து போகவிடாதிருங் கள். பயத்துக்கும், கலக்கத்துக்கும் இடங்கொடாதிருங்கள்.

ஒரு உயரமான மரக்கிளை ஒன்றில், பரிதாபமாக, ஒரு சிறுவன் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் கீழே விழுவானென்றால், பெரியதொரு ஆபத்து நேரிட்டுவிடக்கூடும். அவன், "என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூச்சலிடுகிறான். அவனை காணும் தகப்பன், "மகனே, உன் கைகளைத் தளர விடாதே; இதோ, வேகமாக ஏணி ஒன்றைக் கொண்டு வந்து உன்னை இறக்கி விடுகிறேன்" என்பான் அல்லவா?

அதைப்போலத் தான், பல வேளைகளில் ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் மிகவும் சோர்ந்து பெலனற்றவர்களாய், "ஆண்டவரே இந்த கிறிஸ்தவ வாழ்க்கையில் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. விழுந்து விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது. என்னை தூக்கி நிலைநிறுத்த மாட்டீரோ?" என்று கதறுகிறீர்கள். அப்போது கர்த்தர், "உன் கைகளைத் தளரவிடாதே. உனக்கு உண்டானதை உறுதியாய் பற்றிக்கொண்டிரு" என்று ஆலோசனை சொல்லுகிறார்.

கர்த்தர் சிமிர்னா சபையைப் பார்த்து, "நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசான வன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு. அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்" (வெளி. 2:10) என்று சொல்லுகிறார். தீயத்தீரா சபையைப் பார்த்து, "உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்" (வெளி. 2:25) என்று ஆலோசனை சொல்லுகிறார். ஆகவே கைகளைத் தளரவிடாதிருங்கள்.

ஒருமுறை ஒரு வாலிபன் தன் பெற்றோரை மிகவும் புண்படுத்திவிட்டு, வீட்டை விட்டு வெளியேப் புறப்பட்டான். தாய் வாசல் வரை வந்து, "மகனே, உன்னுடைய வாழ்வில் துயரங்களை நீ சந்திக்கும்போது, உன் தாய் உனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை மறந்துபோகாதே" என்று, கண்ணீருடன் சொல்லியனுப்பினாள். மட்டுமல்ல, அந்த தாய் மகன் திரும்ப வர வேண்டுமென்றும், இரட்சிக்கப்பட வேண்டுமென்றும், ஊழியக்காரனாக வேண்டும் என்றும் தளராமல், ஊக்கமாக ஜெபித்துக் கொண்டே வந்தாள்.

கர்த்தருடைய பாதங்களைப் பிடித்து, "என் மகனை நீதிமானாய்த் திரும்பக் கொண்டு வாரும்" என்று கதறினாள். தளராத அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்டார். அந்த மகனை தற்கொலையிலிருந்து விடுவித்து, ஊழியக்காரனாக்கி திரும்பி வரும்படி கிருபை செய்தார். அந்த மகன் வேறு யாரும் அல்ல. பல்லாயிரக்கணக்கான மக்களை கர்த்தருக்குள் வழி நடத்தினவரும், மாபெரும் வேத பண்டிதரும், புகழ்பெற்ற பல புத்தகங்களை எழுதியவருமாகிய R.A. டோரி (R.A. Torrey) என்ற வல்லமையுள்ள தேவ ஊழியர்.

அமலேக்கியருக்கும், இஸ்ரவேலருக்கும் ஏற்பட்ட யுத்தத்தில் ஜெயம் பெறும் படி, மோசே தேவனுடைய கோலை ஏந்தி மலையின் உச்சியிலே நின்றார். மோசேயின் கைகள் தளர்ந்தபோதோ, ஊரும் ஆரோனும் அவரது இரண்டு கைகளைத் தாங்கியதினால் இஸ்ரவேலர் ஜெயத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள் (யாத். 17:8-16). தேவபிள்ளைகளே, உங்கள் கைகளைத் தளரவிடாதிருங்கள்.

நினைவிற்கு:- "ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்" (எபி. 10:35).