தசமபாகம்!

"தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்" (மல். 3:10).

தசமபாகம் கர்த்தருடையது. கர்த்தருக்கு நீங்கள் கொடுக்கும்போது, கர்த்தரும் மனம் மகிழுகிறார்; நீங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். பத்தில் ஒன்பது பாகங் களை நீங்கள் பூரணமாய் சுதந்தரிக்கும்படி, கர்த்தர் உங்களுக்கு அப்பாகத்தை ஆசீர்வாதமாக்கித் தருகிறார்.

ஒருமுறை ஒரு செல்வந்தர் காட்டின் வழியாகச் செல்லும்போது, ஒரு ஏழை மனிதனைக் கண்டார். அவர், அந்த ஏழை மனிதன் மேல் மனதுருகி, தன்னுடைய மணிபர்சிலுள்ள பத்து ரூபாயை எடுத்து, அதிலே ஒன்பது ரூபாயை அந்த ஏழைக்கு கொடுத்து: "இதை வைத்து உன் குடும்பத்தை நடத்து, மீதி ஒரு ரூபாய் மட்டுமே எனக்கு இருக்கிறது. நான் வீடு போய்ச் சேர அதை பயன்படுத்துவேன்" என்றார்.

அந்த செல்வந்தன் சற்று தூரம் சென்றவுடனே, அந்த ஏழை மனுஷனுக்கு உள்ளத்தில் பேராசை வந்தது. "அந்த ஒரு ரூபாயையும்கூட அபகரித்துக் கொண்டால் என்ன?" என்று எண்ணினான். ஆகவே அவன் அந்த செல்வந்தனுக்குப் பின்பாக போய், ஒரு கட்டையால் செல்வந்தனைத் தாக்கி, அவருடைய மணிபர்சிலிருந்த ஒரு ரூபாயையும் அபகரித்துக்கொண்டான். அடிபட்டு கீழே விழுந்த அந்த இரக்கமுள்ள செல்வந்தர், என்ன நினைத்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.

அதைப்போலத்தான் கர்த்தர் உங்களுக்கு பத்தில் ஒன்பது பாகங்களை தயவாய்த் தந்தருளுகிறார். ஒரு பங்கைத்தான் அவருடைய பணிக்கென்று கேட்கிறார். அந்தப் பங்கை நீங்கள் வஞ்சிக்க நினைக்கும்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கு அது எவ்வளவு பெரிய அடியாய் இருக்கும்?

நீங்கள் ஏன் தசமபாகம் செலுத்த வேண்டும்? முதலாவது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறபடியால், அந்த ஆசீர்வாதத்தின் ஒரு பகுதியை ஆசீர்வாதத்திற்கு காரணமாயிருக்கிற கர்த்தருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் நீங்கள் கொடுக்க வேண்டும். சிலர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அந்த குத்தகையை ஒழுங்காச் செலுத்துவார்கள். வட்டிக்கு கடன் வாங்கி, அந்த வட்டியை அசலுடன் சேர்த்து ஒழுங்காகக் கட்டுவார்கள். ஆனால் கர்த்தருக்குக் கொடுக்கவோ பிரியம் வராது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நிரம்பி வழிய ஆசீர்வதிக்க வேண்டு மென்றால், கர்த்தருக்கு தசமபாகம் கொடுப்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியின் அனுபவமாயிருக்கட்டும். தசமபாகத்தில் கைவைப்பதும், கர்த்தருக்கு செலுத்தா மலிருப்பதும் ஒருவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்ளுவதுடன் கர்த்தரையும் வஞ்சிப்பதற்கு ஏதுவாயிருக்கும்.

இரண்டாவது, தசமபாகம் செலுத்தும்போது, சுவிசேஷம் உலகமெங்கும் அறிவிக்கப்படுவதற்கும், சபைகள் வளருவதற்கும் உதவியாயிருக்கிறது. நீங்கள் ஊழியங்களையும், ஊழியர்களையும் நேசிப்பீர்களென்றால், கர்த்தருக்கு உங்களால் கொடுக்காமலிருக்க முடியவே முடியாது. நீங்கள் மனமுவந்து சந்தோஷமாய் உற்சாகமாய் கொடுக்கும்போது, கர்த்தருடைய ஊழியங்கள் வளரும். நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

மூன்றாவது, தசமபாகம் செலுத்துவது, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படி வதாகும். இயேசு சொன்னார், "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" (யோவா. 14:15).

நினைவிற்கு:- "தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக் கொண்டான்" (ஆதி. 28:22).