தன்னால் இயன்றதை!

"இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்" (மாற்கு 14:8).

"தன்னால் இயன்றதைச் செய்தாள்" என்று கர்த்தர் சாட்சி கொடுக்கிறார். அவள் ஒரு பாவியான ஸ்திரீதான். சமுதாயத்தினால் அருவருத்து ஒதுக்கப்பட்டவள் தான். ஆனால் கர்த்தர் அவளுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தபோது, அவள் கர்த்தருக்கென்று தன்னால் இயன்றதைச் செய்தாள்.

அவள் நன்றியுள்ள இருதயத்தோடு இயேசுவைக் காண வந்தாள். அவள் வெறும் கையாக அல்ல, இயேசுவின் சிரசின்மேல் வார்க்கப்படுவதற்கான, விலை யேறப்பெற்ற பரிமளத் தைலத்தையுடைய ஒரு பரணியோடு வந்தாள். சீஷர்கள் அதைக் கண்டபோது மிகவும் விசனமடைந்தார்கள்.

"இந்த விலையேறப் பெற்ற தைலத்தை இந்த ஸ்திரீ வீணாக்கி விட்டாளே" என்றார்கள். அதற்கு இயேசு, "இவள் தன்னால் முடியாத, தன்னுடைய திராணிக்கு மிஞ்சின ஒன்றை அல்ல, தன்னால் இயன்றதைச் செய்தாள்" என்றார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரிடத்தில் எண்ணற்ற காரியங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறீர்கள். அவர் என்னை ஆசீர்வதிக்க மாட்டாரா என்று வாஞ்சிக் கிறீர்கள். கர்த்தர் எத்தனையோ நன்மைகளைச் செய்திருந்தாலும், மேலும் மேலும் நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.

அதே நேரத்தில், நீங்கள் உங்களால் இயன்றதை கர்த்தருக்கென்று செய்கிறீர்களா? கர்த்தர் உங்களுடைய திராணிக்கு மிஞ்சினதை எதிர்பார்க்க வில்லை. ஆனால் உங்களால் இயன்றதை கர்த்தருக்கென்று நீங்கள் செய்யும்போது, அவருடைய உள்ளம் களிகூர்ந்து மகிழும்.

வேதத்திலே, ஒரு சிறு பையன் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க வனாந் தரத்திற்கு வந்திருந்தான். அவனிடத்தில் இருந்தது வெறும் ஐந்து அப்பமும், இரண்டு மீனும்தான். அவன் தன்னால் இயன்றதை கர்த்தருடைய கரத்திலே ஒப்புக்கொடுத்து விட்டான். அவனுக்கும் ஆசீர்வாதம், ஜனங்களுக்கும் ஆசீர்வாதம்!

அன்னாளுக்கு குழந்தையில்லாமலிருந்தது. ஆனாலும் கர்த்தருக்குத் தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டுமென்று ஆவல் கொண்டாள். ஆண்டவரே, நீர் எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தால் அந்த குமாரனை உமக்கே அர்ப்பணிப்பேன் என்றாள். அவளுடைய பொருத்தனை கர்த்தருடைய இருதயத்தை உருக்கிற்று. ஆசீர்வாதமான சாமுவேலை மட்டுமல்ல, இன்னும் ஐந்து குழந்தைகளையும் பெற்றுத் தந்தது.

அன்றைக்கு பெலிஸ்தியனான கோலியாத் வந்து இஸ்ரவேலரை நிந்தித்தான். கர்த்தரை அவமதித்தான். தனக்காக பக்தி வைராக்கியம் பாராட்ட ஒருவரு மில்லையே என்று, கர்த்தருடைய கண்கள் தேடினது. கர்த்தரை நேசித்ததினால் தாவீது தன்னால் இயன்றதைக் கர்த்தருக்குச் செய்ய நினைத்தார். கவணில் கல்லைத் தொடுத்து, கோலியாத்தின் மேல் எறிந்து அவனை மடங்கடித்துப் போட்டார்.

தேவபிள்ளைகளே, உங்களால் இயன்றதை கர்த்தருக்குச் செய்யுங்கள். நீங்கள் இந்த உலகத்தின் வழியாக ஒரே ஒருமுறை தான் கடந்து செல்லுகிறீர்கள். கர்த்தருடைய மனம் மகிழும்படி அவருக்கு ஊழியம் செய்து, அல்லது உங்களால் இயன்றதை கர்த்தருடைய ஊழியத்திற்குக் கொடுத்து அவரைக் கனப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- "வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெ அல்லாமலும் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்" (2 இராஜா. 4:2).