அநாதி தேவன்!

"அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்" (உபா. 33:27).

அநாதி தேவனுடைய அடைக்கலத்திற்குள் இருப்பது எத்தனை மேன்மையானது! எத்தனை பாதுகாப்பானது! அநாதி தேவனுடைய பெரிய செட்டைகள் உங்களுக்கு அடைக்கலம் தருகின்றன.

மோசே, தான் மரணமடையும் முன்பு, இஸ்ரவேல் ஜனங்களை யெல்லாம் அநாதி தேவனுடைய அடைக்கலத்திற்குள்ளே கொடுத்து ஆசீர்வதித்தார். அத்தனை வருடங்களாக மோசே அவர்களுக்கு ஆறுதலையும், மனத்தேறுதலையும் கொடுத்து வந்தார். ஆனால் இப்பொழுதோ, வயதாகி, உலகத்தை விட்டு கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி மோசேயின் அரவணைப்பு இஸ்ரவேலருக்குக் கிடைக்கப்போவதில்லை.

மோசே கடந்துபோனாலும், கடந்துபோகாத ஒருவர் உங்களுக்கு உண்டு. அவர்தான் அநாதி தேவன். அந்த அநாதி தேவன் யார்? சங்கீதக்காரன் சொல்லுகிறான், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்" (சங். 90:2). தேவபிள்ளைகளே, தன்னுடைய அடைக்கலத்தைத் தேடி வருகிற ஒருவரையும் கர்த்தர் புறம்பே தள்ளுவதில்லை. எந்த தேவையானாலும், எந்த பிரச்சனை யானாலும், அநாதி தேவனிடத்தில் வந்துவிடுங்கள். அவர் உங்களுக்கு என்றென்றைக்குமுள்ள அடைக்கலத்தைத் தருவார். அவர் உங்களுக்குத் தருகிற அடைக்கலம் என்ன?

முதலாவது, ஒரு தகப்பனைப்போல அடைக்கலம் தருகிறார். தகப்பனுடைய மார்பிலிருக்கும் குழந்தை ஒருநாளும் பயப்படாது, கலங்காது. கிறிஸ்து உங்களுக்கு ஒரு அன்பான தகப்பனாய் பூமியிலே இறங்கி வந்தார். சிலுவை சுமந்த தோள்களிலே ஒவ்வொருநாளும் உங்களை தூக்கி சுமக்கிறார். அவருடைய ஐங்காயங்களுக்குள்ளே உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். ஆம், அநாதி தேவனே உங்களுக்கு அடைக்கலம்.

இரண்டாவது, ஒரு தாயைப் போல அடைக்கலம் தருகிறார். மழை பெய்யும்போது, தாய் குழந்தையைத் தன் சேலைக்குள் மூடி மறைத்துக் கொள்ளுவாள். தன் உயிரே போனாலும் குழந்தைக்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாத்துக்கொள்ளுவாள். கர்த்தர் சொல்லுகிறார்: "ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்" (ஏசாயா 66:13). அநாதி தேவன் தாயைப்போல உங்களைத் தேற்றி அடைக்கலம் தருகிறார். அவர் எல்ஷடாய் தேவன் அல்லவா?

மூன்றாவது, கோழி தன் சேட்டைகளுக்குள்ளே தன் குஞ்சுகளுக்கு அடைக்கலம் தருவதைப்போல கர்த்தர் உங்களுக்கு அன்பின் அடைக்கலத்தைத் தருகிறார். கர்த்தர் சொல்லுகிறார், "கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்" (லூக். 13:34). தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒவ்வொருநாளும் சத்துருவின் நிழல்படாதபடி தம் செட்டை களின் நிழலிலே உங்களை மறைத்துப் பாதுகாத்துக் கொள்ளுவார்.

நினைவிற்கு:- "நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்" (யாத். 19:4).