அவரது வேதனை!

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்" (ஏசா. 53:5).

கிறிஸ்தவ மார்க்கத்திற்கென, கிறிஸ்து கொடுத்திருக்கிற ஒரு பெரிய கிருபை பாவ மன்னிப்பாகும். அந்த பாவ மன்னிப்பை நீங்கள் அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. பாவத்தை மன்னிக்கத்தான் கர்த்தர் இருக்கிறாரே, எத்தனை முறை நாம் பாவம் செய்தால்தான் என்ன என்று துணிகிறவர்களாய் நீங்கள் இருந்து விடக்கூடாது.

ஒரு வாலிபன் பாவத்தில் விழுவதும், எழும்புவதும், மறுபடியும் பாவத்தில் விழுவதுமாக இருந்தான். ஒருநாள் அவன் காலை வேளையிலே தெருவிலே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எருது ஒன்று போய்கொண்டிருந்தது. அதனுடைய முதுகிலே பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு காகம் அதைப் பார்த்து, பறந்து வந்து அந்த எருதின் மேல் உட்கார்ந்து அந்த புண்ணை கொத்தி இரத்தத்தைக் குடித்தது. வலி தாங்கமுடியாத அந்த எருது துடியாய்த் துடித்து, வேகமாய் ஓட ஆரம்பித்தது. கதற ஆரம்பித்தது.

காகத்துக்கு இன்பமாக இருந்த காரியம், எருதுவுக்கு துன்பமானதாய் இருந்தது. கொஞ்ச நேரம் பறப்பதும், பின்பு மீண்டும் புண்ணைக் கொத்துவதுமாக அந்த காகம் எருதினை துன்பப்படுத்திக் கொண்டே இருந்தது. எருது வலி தாங்கமுடியாமல் துடித்து ஓடியது. அந்த வாலிபனால் அதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த காகத்தைத் துரத்தி அடித்தான்.

வீட்டிற்குத் திரும்பிய பிறகு, காகம் எருதின் காயத்தில் கொத்தி மேலும் மேலும் புண்படுத்திய அக்காட்சி, அவனுக்கு முன்பாயிருந்த மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓடியது. கொஞ்ச நேரத்தில் எருது இருந்த இடத்தில் தேவகுமாரன் காயங்களோடு நிற்பதாகக் காட்சி மாறியது. அந்த காகத்தை போன்று இந்த வாலிபன் கிறிஸ்துவின் புண்களில் மீண்டும் மீண்டும் ஆணிகளை அறைந்து தேவனை வேதனைப்படுத்திக் கொண்டிருப்பதை மனக்கண்களால் கண்டான்.

அவன் திடுக்கிட்டு விழித்து, வேதத்தைத் திறந்து பார்த்தான். "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென் றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்" (எபி. 10:29) என்ற வசனமே அந்த நேரத்தில் அவனுடைய கண்களில் விழுந்தது. இந்த வார்த்தைகள் அவனுடைய இருதயத்தை உடைத்தன.

ஐயோ, நான் பாவமன்னிப்பின் உன்னதத்தை உணராமல், திரும்பத் திரும்ப பாவம் செய்து கர்த்தரை வேதனைப்படுத்திவிட்டேனே, ஏற்கெனவே காயப்பட்ட அவரை என்னுடைய பாவங்களினால் குத்தி மேலும் புண்ணாக்கி விட்டேனே என்று கதறி அழுதான். அன்றுமுதல் பாவம் அவனுடைய மனசாட்சியை குத்துகிறதாக அமைந்தது. அதன் பிறகு அவனால் பாவம் சேய இயலவில்லை.

தேவபிள்ளைகளே, ஏசாயா 53-ம் அதிகாரத்தைத் மீண்டும் மீண்டும் வாசித்துப் பாருங்கள். மீண்டும் மீண்டும் பாவம் செய்து, கர்த்தரை வேதனைப்படுத்தாதபடிக்கு பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள்.

நினைவிற்கு:- "மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்" (எபி. 6:6).