அந்தச் சேவல்!

"இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மாற்.14:30).

அந்தச் சேவல் பாவத்திற்கு விரோதமாய்க் கூவி பேதுருவின் துரோகத்தை உணர்த்திக் காட்டியது. தேவபிள்ளைகளே நீங்கள்கூட அந்தச் சேவலைப்போல் பாவத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியவர்களாகும்.

அப். பவுல், "பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்க வில்லையே" (எபி. 12:4) என்று குறிப்பிடுகிறார். சிலர் தங்களுடைய மனச்சாட்சியை மழுங்கச் செய்து, பாவத்திலே மூழ்கிப் போய்விட்ட படியினால், அதை எதிர்த்து நிற்பதில்லை.

அன்றைக்கு இஸ்ரவேலை ஆண்ட ஏரோது ராஜா, தன் சொந்த சகோதரனைக் கொன்று, அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டான் என்று யோவான்ஸ்நானன் அறிந்தவுடனே, தைரியமாய் அந்த பாவத்தைக் கண்டித்து, "ஏரோதே, நீ உன் சகோதரனுடைய மனைவியை வைத்திருப்பது நியாயம் அல்ல" என்று தைரியமாய் குரலெழுப்பினான். அவன் தன்னைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை.

பழைய ஏற்பாட்டு, புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள், சத்தியத்தை தைரியமாய் சொல்லி, அதனால் சாவே வந்தாலும் அதை தைரியமா ஏற்றுக்கொள்ளுகிறவர்களாக விளங்கினார்கள். அவர்கள் ஒருபோதும் பூசி மழுப்பியதுமில்லை, பாவத்தோடு ஒப்புரவானதுமில்லை, கண்டும் காணாதவர்களைப்போல மேலோட்டமாய் சென்று விட்டதுமில்லை.

ஒருவனுடைய சரீரத்திலே பெரிய கட்டி வந்து, சீழ்ப்பிடித்திருக்கிறதென்றால், அந்தக் கட்டியின் கணுவை உடைத்து சீழ் பிதுக்கினால்தான் குணமாகும். "வலிக்குமே; இது கடினமான காரியம் அல்லவா" என்று விட்டுவிட்டால் அவன் சுகம் பெற முடியாது. சீழை எடுக்காமல் மேற்பூச்சாய் பூசிவிட்டு வருகிறவன் வியாதியஸ்தனுக்கு தீங்கு இழைக்கிறவனாகவேயிருப்பான். கர்த்தர் எசேக்கியா தீர்க்கதரிசியின் மூலம், "நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினி மித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" (எசேக். 9:4) என்று உரைத்தார்.

எருசலேம் என்றால், அது தேவனுடைய சபையைக் குறிக்கிறது. சபைக்குள்ளே காணப்படுகிற அருவருப்புகள், குறைகள், குற்றங்கள், பாவங்கள், வேதனைகள், தவறுகள், இவைகளுக்காக நீங்கள் அழுது புலம்புகிறவர்களாய் காணப்படவேண்டும். மனச்சாட்சியை மழுங்கடிக் கிறவர்களைக்குறித்து, "நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபச்சாரரோடும் உனக்குப் பங்குண்டு. உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது" (சங். 50:18,19) என்று வேதம் கண்டிக்கிறது.

தேவபிள்ளைகளே, பாவத்தோடு ஒத்துப்போகாதிருங்கள். நீங்கள் பரிசுத்தத்திற்காக வைராக்கியம் பாராட்டுவதோடு, பாவத்திற்கு எதிராய் குரல் கொடுக்கவும், பாவிகளின் மீட்புக்காக கண்ணீரோடு ஜெபிக்கவும் வேண்டும்.

நினைவிற்கு:- "ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்" (எரே.9:1).