அப்பா, பிதாவே!

"அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்" (மாற்கு. 14:36).

இது இயேசு கிறிஸ்து ஜெபித்த ஜெபத்தின் ஒரு பகுதி. அவர் பிதாவை நோக்கி, "அப்பா பிதாவே" என்றுச் சொல்லி இருதயம் உருகி ஜெபித்தார். நீங்களும் அவ்விதமாய் ஜெபிக்கும்படி உங்களுக்கு ஒரு முன் மாதிரியை தந்திருக்கிறார்.

ஒரு போலீஸ் அதிகாரியைப் பாருங்கள். அவருக்கு அதிகாரமிருக்கிறது. திருடர்களும், கொள்ளைக்காரர்களும் அவரைப் பார்த்து நடுங்குகிறார்கள். அவருடைய பெரிய மீசையும், கனத்த உருவமும், கடுமையான முகமும் எல்லோரையும் பயமுறுத்துகிறது. ஆனால், அவர் வீட்டிற்கு வந்தால் பிள்ளைகளுக்கு அன்புள்ள தகப்பனா விளங்குகிறார். அவரைக் கண்டு பிள்ளைகள் பயப்படுவதில்லை.

கர்த்தரைக் கண்டு கேராபீன்கள், சேராபீன்கள் நடுங்குகிறார்கள். இரண்டு செட்டைகளால் முகங்களையும், இரண்டு செட்டைகளால் கால்களையும் மூடி பயபக்தியோடு ஆராதிக்கிறார்கள். அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவர். பட்சிக்கிற அக்கினியா யிருக்கிறவர். ஆனால், நமக்கோ அவர் தகப்பனாயிருக்கிறார். வேதம் சொல்லுகிறது; "அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்" (ரோமர் 8:15,16).

ஒரு முறை சாது சுந்தர்சிங் ஊழியம் செய்து விட்டு திரும்பியபோது, பாதை தவறி நடுக்காட்டில் சிக்கிக்கொண்டார். முன்னால் ஐஸ் தண்ணீரால் நிரம்பிய ஆறு. அதில் இறங்கினால் சரீரம் விறைத்து மரணம் நேரிடக்கூடும். பின்னால், தூரத்தில் கொடிய புலி ஒன்று சீறிக் கொண்டு வருகிறது. அப்போது அவர் என்னச் செய்வதென்று தெரியாமல் அமைதியாய் வானத்தை நோக்கிப் பார்த்து, "அப்பா, பிதாவே" என்று சத்தமிட்டார்.

அப்போது ஆற்றின் அக்கரையிலிருந்து, "இதோ வருகிறேன்" என்று ஒரு சத்தம் கேட்டது, அங்கே திடகாத்திரமான ஒருவர் ஆற்றில் நீந்தி வேகமாய் வந்தார். அவர் சாது சுந்தர் சிங்கைப் பார்த்து, "நீ என் முதுகில் ஏறிக்கொள்" என்றார். அவர் சாதுவை முதுகிலே ஏற்றிக்கொண்டு, நீந்தி அடுத்தக் கரை சேர்ந்தார். என்ன ஆச்சரியம்! அங்கே நெருப்பு எரிந்துக் கொண்டிருந்தது. சாது குளிர் காந்துக் கொண்டே அவரை திரும்பி பார்த்தபோது அவரைக் காணவில்லை. தன் தகப்பனையும், தாயையும் விட்டு இயேசுவை பின்பற்றின அவருக்கு இயேசுவே, "அப்பா பிதாவா" மாறினார்.

உங்களுக்கு ஒரு பரம பிதா உண்டு. அவர் நன்மையான ஈவுகளை உங்களுக்குக் கொடுக்கிறவர். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இறங்குகிறது போல இறங்குகிறவர். கழுகு தன் குஞ்சுகளை தன் சேட்டைகளின் கீழ் வைத்து சுமக்கிறது போல சுமக்கிறவர். தாய் தன் பாலகனை தேற்றுகிறதுபோல தேற்றுகிறவர்.

இன்றைக்கு அநேகர் வானத்தின் கீழே அனாதைகளாய், திக்கற்றவர்களாய் நிற்கிறார்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று அறியாமல் அங்கலாக்கிறார்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை "அப்பா, பிதாவே" என்று அழைத்து ஜெபிப்பீர்களா?

நினைவிற்கு:- "மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்" (கலா. 4:6).