அழகான தேவதூதர்கள்!

"நீங்களோ ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கு வந்து சேர்ந்தீர்கள்" (எபி. 12:22-24).

தேவதூதர்களின் படங்களை பல வீடுகளில் மாட்டியிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். விசேஷமாக, ஒரு சிறுவன் மரப்பலகையினால் செய்யப்பட்ட பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பாலத்தின் பலகைகள் உடைந்திருக்கிறதைப் போலவும், ஒரு தேவதூதன் தன் செட்டைகளை விரித்து, அவனை பாதுகாத்து அழைத்துச் செல்லுவதைப் போலவும் ஒரு படம் உண்டு.

அந்த தேவதூதனுடைய முகம் எவ்வளவு அழகானது! எத்தனை அன்போடும், மனதுருக்கத்தோடும், கவனத்தோடும் அந்தப் சிறுவனை வழி நடத்திச் செல்லுகிறான்! கர்த்தர் உங்களில் எவ்வளவு பாசம் வைத்து ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களை உங்களுக்குத் தந்திருக்கிறார். அவர்கள் துதி பாடலோடு கர்த்தரை ஆராதிக்கிற தேவதூதர்கள். அதே நேரம், பணிவிடை ஆவிகளாய் உங்களுக்கு உதவிச் செய்கிற தேவதூதர்கள்.

வேதம் சொல்லுகிறது, "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்" (சங். 91:11,12). தேவதூதர்கள் மட்டுமல்ல, கர்த்தரும் உங்களை ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொள்ளும்படி உங்கள்மேல் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார். உங்களைக் காக்கிற அவருடைய கண்கள் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை. சங்கீதக்காரன் சொல்லுகிறான், "கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்" (சங். 121:5).

தேவதூதர்களே அவ்வளவு அழகாயிருந்தால், கர்த்தர் எவ்வளவு அழகுள்ளவராயிருப்பார். அவர் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமாயிருக்கிறார். அவர் ஆயிரம் பதினாயிரம் பேரிலும் சிறந்தவர். அவர் முற்றிலும் அழகுள்ளவர். அன்பிலும் அழகிலும் சொரூபியான கர்த்தர் தேவதூதர்களை மகா அழகாக சிருஷ்டித்தார். உங்களை சிருஷ்டிக்கும்போது, தம்முடைய அழகையெல்லாம் உங்களுக்குக் கொடுத்து அவருடைய சாயலிலே, அவருடைய ரூபத்தின்படியே சிருஷ்டித்தார். கனத்தினாலும், மகிமையினாலும் உங்களை முடிசூட்டினார்.

மனிதன் பாவம் செய்தபோது, அந்த பரிசுத்த அழகு சிதைக்கப்பட்டது. "எல்லாரும் பாவஞ்சேது தேவ மகிமையற்றவர்களானார்கள்" (ரோமர் 3:23) என்று வேதம் சொல்லுகிறது. ஆம், ஆதாமின் பாவங்கள் உங்களை கருப்பாக்கிற்று. கிறிஸ்துவின் இரத்தமோ, உங்களைக் கழுவி மீண்டும் அழகாக்கிற்று.

பாவமே செய்யாத பரிசுத்த தேவதூதர்கள் எவ்வளவு அழகாயிருப்பார்கள்! பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாகவும், பொன்னால் மூடப்பட்டவர்களாகவும் காட்சியளிக்கிறார்கள் (எசே. 28:12,13). தேவபிள்ளைகளே, நீங்கள் இராஜாதி இராஜாவின் சிறந்த சிருஷ்டிப்பு என்பதை மறந்து போகாதிருங்கள்.

நினைவிற்கு:- "என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர்" (உன். 5:10).