அழகுள்ள பிள்ளை!

"மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதம் ஒளித்து வைத்தார்கள்" (எபி. 11:23).

இந்த வேதப் பகுதியில் மோசே "அழகுள்ளவன் என்று கண்டு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வேறு பாஷை வேதாகமங்களில் அவன், "தெவீக அழகுள்ளவன்" என்றும், "உத்தமமான கர்த்தருடைய நோக்கத்தின்படியே அழகுள்ளவனாய் பிறந்தான்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசே, கர்த்தருடைய நோக்கத்தை நிறைவேற்ற பிறந்தவன். அவன் பிறந்தவுடனே, தாய் அவனுடைய முகத்தைப் பார்த்து கர்த்தர் அவனிலே தம்முடைய நோக்கத்தையும், சித்தத்தையும் நிறைவேற்றவே பிறந்தான் என்பதைக் கண்டு கொண்டாள். ஆகவே மோசேயை எப்படியாவது பாதுகாக்கவேண்டும் என்று எண்ணி, ராஜாவின் கட்டளைக்குப் பயப்படாமல் அவனைக் காப்பாற்றி கர்த்தருக்கென்று வேறுபிரிக்கப்பட்ட பிள்ளையாய் வளர்த்தாள்.

இன்றைக்கு அநேக கிறிஸ்தவ குடும்பங்களில்கூட பிள்ளைகள் பிறந்தவுடனே, அதற்கு நாள் நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள். எந்த ராசியில் பிறந்ததென்று கணிக்கிறார்கள். ஜாதகம் கணிக்கிறார்கள். ஒரு குடும்பத்தினர் தன்னுடைய பிள்ளைக்கு ஜாதகத்தை கணித்து, நீண்ட நாட்கள் உயிரோடிருக்கும் என்று எழுதி வைத்தார்கள். ஆனால் அந்த பிள்ளையோ, சிறுவயதிலேயே மரித்துவிட்டது. அந்த அதிர்ச்சியை அவர்களால் தாங்க முடியவில்லை. அதோடு ஜாதகத்தின்மேலுள்ள நம்பிக்கையை விட்டுவிட்டு கர்த்தரண்டை திரும்பி வந்தார்கள்.

மோசே, "பார்வோனுடைய குமாரத்தியின் மகன்" என்று அழைக்கப்பட்டான். ஆனால் மோசே பால் குடித்து வளர்ந்ததோ எபிரெய பெண்மணியான தன் தாயினிடத்தில்தான். நீங்கள் அழகில்லாமல் பிறந்திருந்தாலும், கர்த்தர் உங்களை நித்திய அழகுள்ளவர்களாக் கண்டு, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை உங்களுக்கு குடிக்கக் கொடுக்க சித்தமானார். தேவபிள்ளைகளே, நீங்கள் வேத வசனமாகிய ஞானப்பாலைக் குடித்தால்தான் கர்த்தருடைய அழகிலே, கர்த்தருடைய குணாதிசயத்தைப் பெற்று வளர முடியும்.

நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு வேதத்தை போதிக்கிறீர்களா? பரலோக மன்னாவாகிய வார்த்தைகளால் அவர்களை வளர்க்கிறீர்களா? நீங்கள் உங்கள் பிள்ளைகளை உலகத்தின் வேஷத்தைத் தரித்து, இப்பிரபஞ்சத்தின் பழக்க வழக்கங்களின்படி வளர்த்தால் தேவசித்தத்தை உங்களால் நிறைவேற்ற முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் தூய்மையானதாக இருக்காது.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த சுதந்தரத்தைக் குறித்து நீங்கள் வாஞ்சையும், உறுதியுமுள்ளவர்களாயிருக்க வேண்டும். பிள்ளைகளை கஷ்டப்பட்டாவது ஜெப ஜீவியத்தில் வளர்க்க வேண்டும். தேவ பாதையிலே முன்னேறிச் செல்ல அவர்களுக்கு துணை செய்ய வேண்டும். பிள்ளைகளின் ஆவிக்குரிய எதிர்காலம் எல்லாவற்றிற்கும் மேலாக மிக மக்கியமானது அல்லவா?

நினைவிற்கு:- "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோ மென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே" (ரோமர் 8:16,17).