அடங்கியிருங்கள்!

"ஆகையால், ஏற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும் படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்" (1 பேதுரு 5:6).

God's Clock never delays கர்த்தர் ஒவ்வொன்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாய் செய்து முடிக்கிறவர். அவர் ஒருபோதும் முந்தவுமாட்டார். பிந்தவுமாட்டார். என்று சொல்லுவார்கள். அவருடைய சித்தம் எவ்வளவு முக்கியமானதோ, அதைப் போலவே அவருடைய நேரமும், காலமும் முக்கியமானவைகள்.

சாலொமோன் ஞானி "ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு" என்று ஏறக்குறைய 18 காலங்களைக் குறித்து எழுதுகிறார் (பிர. 3:1-8). அதில் ஒரு முக்கியமான காலம், "கர்த்தர் உங்களை உயர்த்துகிற காலம்." அவர் உயர்த்துகிற வரையிலும் நீங்கள் அவருடைய பலத்த கரத்திலே அடங்கியிருக்க வேண்டியது அவசியம். அநேகம் பேர் குறுக்கு வழிகளிலே, மனுஷரை நாடி உயர நினைக்கிறார்கள். மனிதனால் உயர்த்தப்படும்போது அது வேதனையில்தான் முடியும்.

யோசேப்பினுடைய வாழ்க்கையைப் பாருங்கள். யோசேப்பு தன்னுடைய உயர்வுக்காக பல வருஷங்கள் காத்திருந்தார். அவர் குழியிலே தள்ளப்பட்டார், எகிப்திலே அடிமையாக விற்கப்பட்டார், பார்வோனின் வீட்டில் அநியாயமா குற்றம்சாட்டப்பட்டார், சிறைச்சாலையில் தள்ளப்பட்டார். ஆனால் ஏற்ற வேளை வந்தபோது, கர்த்தர் அவரை எகிப்தின் அதிபதியா உயர்த்தினார்.

சிறைச்சாலையிலிருந்து பார்வோனுடைய அரண்மனைக்குள் செல்ல ஒரு சில மணி நேரங்கள்தான் ஆகியிருந்திருக்கும். சில மணி நேரங்களுக்கு முன்பு வரை அவர் சிறைக்கைதி, மதிப்பில்லாதவர். ஆனால் பின்போ எகிப்து முழுமைக்கும் பிரதம மந்திரி. சகல ஜனங்களுக்கும் உணவளித்து பராமரிக்கிறவர். ஆம், கர்த்தர் ஏற்ற வேளையில் அவரை அருமையாய் உயர்த்தினார்.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைப் பாருங்கள்! சில மணி நேரங்களுக்கு முன்பு ராஜாவினால் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிமித்தம் அக்கினிச்சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களுக்குள்ளாக அவர்கள் உயர்த்தப்பட்டார்கள். ராஜாவினால் கனம் பண்ணப் பட்டார்கள். ஆம், கர்த்தர் உயர்த்தும்போது கனமும் கூடவே வரும்.

கர்த்தர் உங்களை உயர்த்த சில நிமிட நேரங்கள் போதும். வேதம் சொல்லுகிறது, "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும் தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்" (சங். 113:7,8).

இலையுதிர் காலத்தில், மரங்களைப் பார்த்தால் இலைகளெல்லாம் உதிர்ந்து பரிதாபமாக் காட்சியளிக்கும். ஆனால் இளவேனிற் காலம் ஆரம்பமாகும்போது, அந்த மரங்களெல்லாம் பூத்து, காத்து, குலுங்க ஆரம்பிக்கும். அழகான இலைகளோடும், மலர்களோடும், கனிகளோடும் காணப்படும்போது எத்தனை மகிழ்ச்சியாயிருக்கும்! தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய கரத்தில் அடங்கி யிருக்கும்போது, நிச்சயமாகவே ஏற்றக் காலத்தில் உங்களை அவர் உயர்த்துவார்.

நினைவிற்கு:- "நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமா அடங்கி நடக்க வேண்டுமல்லவா?" (எபி. 12:9).