கர்த்தரை முன் வைக்கிறவர்கள்!

"கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங். 16:8).

சிலர் சின்ன காரியத்திற்கும் அசைக்கப்பட்டுப் போய்விடுகிறார்கள். விசுவாசத்தினின்று வழி விலகிப் போய்விடுகிறார்கள். ஆனால் தாவீதோ, "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். நான் அசைக்கப்படுவதில்லை" என்று உறுதியாய் சொல்லுகிறார்.

பலத்த போராட்டங்களும், பிரச்சனைகளும் வரும்பொழுது கருங்கல்லைப் போன்ற உறுதியான உள்ளம்கூட அசைந்துவிடும். சோதனைமேல் சோதனை வரும்பொழுது அசையாத உள்ளமும் அசைந்துவிடும். "பட்ட காலிலேயே படும்; கெட்ட குடியே கெடும்" என்று சொல்லும்படியான நிலைமையில், அசையாதவர்கள் யாருண்டு?

ஒரு பெயர்க் கிறிஸ்தவருடைய குடும்பத்திலே திடீரென்று ஒரு மரணம் ஏற்பட்டது. அப்போது, அவர்கள் தங்கள் வீட்டிற்குள் வைத்திருந்த இயேசுவானவர் படத்தையும், வசன அட்டைகளையும் வெளியேக் கொண்டு வந்து உடைத்தார்கள். கிழித்தார்கள். வேதாகமத்தை தூக்கி வீசினார்கள். இயேசுவும் வேண்டாம். கிறிஸ்தவ மார்க்கமும் வேண்டாம் என்றார்கள். காரணம், அவர்கள் கர்த்தரை எப்பொழுதும் தன் முன்பாக வைக்கவில்லை. கர்த்தருக்குள் ஆழமான வேர் விட்டு உறுதியாயிருக்கவில்லை. மரித்துப் போன சகோதரன் கர்த்தருக்குள் மரித்துப்போயிருந்தால், கிறிஸ்துவுக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கக்கூடும். ஆனால் உறுதியில்லாத கிறிஸ்தவர்களாயிருந்தபடியினால் அவர்களுடைய விசுவாசம் தள்ளாடிப் போவிட்டது.

மெழுகையும், களிமண்ணையும் தீயினிடத்தில் கொண்டு வாருங்கள். தீயின் சுபாவம் ஒன்றுதான். ஆனால் அது மெழுகை உருகி ஓடச் செய்கிறது. அதே நேரம், களிமண்ணை இறுகி பெலன் கொள்ளச் செய்கிறது. மனுஷருக்கு நேரிடுகிற சோதனைதான் எல்லாருக்கும் வருகிறது. ஆனால் சிலருடைய இருதயம் அசைக்கப்பட்டு மெழுகைப்போல உருகி ஓடி விடுகிறது. கர்த்தரை எப்பொழுதும் தங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறவர்களோ, சோதனைகளின் மத்தியிலும் கர்த்தருக்காக வைராக்கியமுள்ளவர்களாய் நிற்பார்கள்.

காற்று வீசும்பொழுது அது சிறிய தீயை அணைத்துப் போட்டுவிடும். ஆனால் பெரிய தீயாயிருக்குமானால் காற்று வீச வீச அதிகமாய் ஜுவாலித்து எரியுமே தவிர அணைந்து போகாது. அது பற்றிப் பிடித்து பரவ ஆரம்பித்துவிடும். கர்த்தர் பேரில் மேலோட்டமான அன்பு மாத்திரம் வைத்திருப்பீர்களானால், சோதனை அதை மேற்கொள்ள முயற்சிக்கும். ஆழமான அன்பு வைத்திருப்பீர்களானால் அது அணைவதில்லை. பற்றிப் பிடித்து பரவ ஆரம்பித்து விடும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் அசைக்கப்படுவதில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அயலகத்தார், உங்களை அசைத்துப் பார்க்கிறார்களா? "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். நான் அசைக்கப்படுவதில்லை" என்று விசுவாசத்துடன் சொல்லுங்கள்.

நினைவிற்கு:- "கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல இருப்பார்கள்" (சங். 125:1).