அவர் செய்தார்!

"கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லா வற்றினாலும் அறியாதவன் யார்?" (யோபு 12:9).

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சுரங்கத்தைத் தொழிலாளர்கள் தோண்டிக் கொண்டிருந்தபோது, அங்கே ஒரு பெரிய வைரக் கட்டியைக் கண்டெடுத்தார்கள். அந்த சுரங்கத் தொழிலாளர்கள் அதைத் தங்களது தேசத்தை அரசாளுகிற ராஜாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அது அவருடைய பொற்கிரீடத்திலே பதிக்கப்படவேண்டுமென்பது அவர்களது ஆசை. ராஜா அதை பெற்றுக்கொண்டபோது அதை சரியான அளவிலே செதுக்கவும், அதற்கு மெருகேற்றவும் ஒரு விசேஷ வைர சிற்பியிடம் அனுப்பிவைத்தார்.

உலகப் பிரசித்திபெற்ற அந்த சிற்பி அதை வாங்கி, தன்னுடைய உளியினால் ஓங்கி அடித்தான். பல பகுதிகளை செதுக்கி கீழே தள்ளினான். ஒருவேளை அவன் செதுக்குகிறதை மற்றவர்கள் பார்க்கும்போது, விலைமதிக்க முடியாத வைரத்தை இப்படி சுத்தியால் அடிக்கிறானே, செதுக்கித் தள்ளுகிறானே என்று எண்ணியிருந்திருக்கக்கூடும்.

ஆனால் அவனோ, அதை அப்படி செதுக்குவதற்கு முன்பாக பல இரவும், பகலும் வைரத்தின் இழையோட்டங்களை கவனித்து, மிகவும் திட்டமிட்டு, பல நூற்றுக்கணக்கான வரைபடங்களை வரைந்து, அதன் பின்னர்தான் அடிப்பது மற்றும் செதுக்குவது போன்ற காரியங்களைச் செய்திருக்கக்கூடும். வைரத்தை செதுக்குவதில் கொஞ்சமும் அவன் தவறு செய்யவில்லை. அவன் முழுவதுமாக அதை மெருகேற்றின பின்பு, ராஜாவினுடைய கிரீடத்தில் பதிக்கும்படி அனுப்பி வைத்தான்.

அந்த வைரத்தில் அளவில்லாத பிரகாசமும், ஒளியும், வண்ணங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அந்த கிரீடத்தையே அது அழகாக்கிற்று.

பல வேளைகளில் உங்கள் வாழ்க்கையிலே சோதனைகள் வருகின்றன. தண்ணீருக்குள்ளாகவும், அக்கினிக்குள்ளாகவும் கடந்து செல்லவேண்டியதிருக்கிறது. ஐயோ! கர்த்தர் என்னை கைவிட்டாரோ, நான் வடிக்கிற கண்ணீரை அவர் அறியாமல் இருக்கிறாரோ, என்றெல்லாம் நீங்கள் கதறக்கூடும். ஆனால் அவர் அறியாமல் ஒன்றும் உங்களுக்கு நேரிடுவதில்லை.

இதற்கெல்லாம் காரணம், நீங்கள் ஒரு நாள் ராஜாதி ராஜாவின் கிரீடத்தில் வைரமாய் விளங்க வேண்டுமென்பதுதான். உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை எப்படி உருவாக்குவது என்பதை பரம சிற்பியான கர்த்தர் அறிந்திருக்கிறார். அவரை அறியாமல் வீணாக ஒரு துயரமும் உங்களுடைய வாழ்க்கையில் மோதியடிக்கவே முடியாது. உங்களுடைய துயரங்கள் யாவும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாக மாறவே செய்யும். நீங்கள் படுகிற எல்லா பாடுகளையும் பரமபிதா அறிந்திருக்கிறார்.

யோபு சொல்லுகிறார்: "ஆனாலும் நான் போகும்வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10). தேவபிள்ளைகளே, பரமபிதா நீங்கள் நடக்கிற பாதைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். பாடுகள் கொஞ்ச நாட்களுக்குள் ஓடி மறைந்துவிடும். ஆனால் நித்திய மகிழ்ச்சியோ என்றென்றைக்கும் உங்களில் தங்கியிருக்கும்.

நினைவிற்கு :- "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர் களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8:28).