அந்த தாகம்!

"என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது" (சங். 42:2).

கர்த்தர் மேலுள்ள தாகம் என்பது ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் அடையாளமாகும். இது உள்ளான மனுஷனின் தெய்வீகம், பரிசுத்தம் மற்றும் ஆவிக்குரிய ஜீவியத்தின் பரிபூரணம் ஆகியவற்றில் இருக்க வேண்டும்.

முதலாவது, இரட்சிப்பின் மேல் தாகம். இந்த தாகத்தைத் தீர்க்கத்தான் கர்த்தர் ஜீவ தண்ணீரை வாக்குப்பண்ணியிருக்கிறார். ஒரு மனுஷன், தன்னுடைய பாவங்கள் நீங்கி இரட்சிப்பின் சந்தோஷத்தைப் பெற வேண்டுமென்றும், குற்ற மனச்சாட்சி நீங்கி பரலோக ஆசீர்வாதங்களினால் நிரப்பப்பட வேண்டுமென்றும் வாஞ்சிக்கிறான். இயேசு சொன்னார்: "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்" (யோவான் 4:14). இரட்சிப்புக்கேற்ற தாகத்தைக் கர்த்தர் ஜீவ தண்ணீருள்ள நீரூற்றால் தீர்க்கிறார். அதுவே இரட்சிப்பின் சந்தோஷமாய் உங்களுக்குள் பொங்குகிறது.

இரண்டாவது, ஆவிக்குரிய தாகம். இரட்சிக்கப்பட்டவர்கள் ஒரு மேலான அனுபவத்தின்மேல் தாகமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அதுதான் ஆவிக்குரிய தாகம். கர்த்தரை தொழுதுகொள்ள, ஆராதிக்க, பரிசுத்த ஆவியின் வரங்களையும், வல்லமைகளையும் பெற்றுக் கொள்ள இந்த தாகம் உங்களுக்கு மிகவும் அவசியம். வேதம் சொல்லுகிறது, "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்" (யோவான் 4:24).

இந்த தாகமுள்ளவர்களை இயேசு அன்றைக்கு அறை கூவி அழைத்தார். "பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன். வேத வாக்கியம் சோல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்" (யோவான் 7:37-39) என்று வேதத்திலே வாசிக்கிறோம்.

கர்த்தர் இரட்சிப்பை நீரூற்றுக்கும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை ஜீவத் தண்ணீருள்ள நதிகளுக்கும் ஒப்பிட்டு அவ்வாறு சொன்னார். இரட்சிப்பின் நீரூற்று அதைப் பெற்றவருக்கு மட்டுமே பிரயோஜனமாயிருக்கும். ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அநேகருடைய தாகத்தை தீர்க்க போதுமானதாயிருக்கிறது. நீங்கள் ஆவியின் அபிஷேகத்தின் மேல் வாஞ்சையும், தாகமுமுள்ளவர்களாயு மாயிருக்க வேண்டும்.

மூன்றாவது, கிறிஸ்துவின் பரிபூரணம். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, அதோடு நின்றுவிடாமல், கிறிஸ்துவின் தெவீகத்தின் பூரணத்தை வாஞ்சிக்க வேண்டும். பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல நீங்களும் பூரண சற்குணராயிருக்க வேண்டும். தேவபிள்ளைகளே, இந்த தாகங்கள் உங்களில் மிகுதியாய் இருக்குமேயானால், சகல ஆசீர்வாதங்களும் உங்களைத் தேடி வரும்.

நினைவிற்கு:- "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங். 42:1).